Monday, December 6, 2010

பக்தி பாடல்கள்

முருகன் பாடல்கள்

நீயல்லால் தெய்வமில்லை
எனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா

(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுதிடலே
இங்கு யான் பெற்ற இன்பம்

(நீயல்லால்)
பாடல்: நீயல்லால் தெய்வமில்லை
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
___________________________________________________

கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்

(கந்தன்)

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தனேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து சொந்தம் கொண்டாடிடுவாள்

(கந்தன்)

மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம் தெய்வம் துணை தாருமடா

(கந்தன்)
பாடல்: கந்தன் திருநீரணிந்தால்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
___________________________________________________

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா

(உள்ளம்)

பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா

(உள்ளம்)

பாசம் அகன்றதய்யா என் நெஞ்சில் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா

(உள்ளம்)

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா

(உள்ளம்)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா

(உள்ளம்)
பாடல்: உள்ளம் உருகுதய்யா முருகா
குரல்: டி எம் சௌந்தரராஜன்
ராகம்: பீம்ப்ளஸ்
___________________________________________________

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் - நீ

(கற்பனை)

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையக் கடலே - நீ

(கற்பனை)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

(கற்பனை)

பாடல்: கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
குரல்: டி எம் சௌந்தரராஜன்



கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
விற்கால வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!
(கற்பூர)
புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!
(கற்பூர)
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!
(கற்பூர)
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளையும் தீருமம்மா!
(கற்பூர)
நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!
(கற்பூர)
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!
(கற்பூர)
அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!
(கற்பூர)
கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவள வாயழகி உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!
(கற்பூர)
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!
(கற்பூர) 






கண்ணன் பக்தி பாடல்கள்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வாண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (2)
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (2)
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் (2)
(புல்லாங்குழல்)
பாடல்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
குரல்: டி எம் சௌந்தரராஜன் 

மந்திரங்கள் மற்றும் பக்தி பாடல்கள்

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்
எழுதியவர்: ஔவையார்



சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

கந்த சஷ்டி கவசம்...

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

ஸ்ரீ காயத்ரி மந்திரம்


ஸ்ரீ காயத்ரி மந்திரமானது இருக்கு வேதத்திலும் , கிருஷ்ண யசுர் வேதத்திலும், சுக்கில யசுர் வேதத்திலும், சாம வேதத்திலும், பிருஹதாரண்யக உபநிடதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"
என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களி லெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

காயத்ரி மந்திரம்:-

"ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.

நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஸ்ரீ காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை :-

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் காயத்ரி மந்திரதில் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo