Thursday, March 17, 2011

சமையல் குறிப்பு சாதம் வகை



தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப் (அல்லது பிரியாணி அரிசி)
பால் – 500 மிலி
மாங்காய்த் துருவல் – 1 கப் (துருவியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 2
இலவங்கப் பட்டை – 1 (விரும்பினால்)
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
  • பாலைக் காய்ச்சி, பொங்கிவரும்போது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சில துளிகள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவைத்து பால் திரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • திரிந்த பாலை பனீர் வடிகட்டி அல்லது ஒரு துணியில் போட்டு கையால் ஒட்ட பிழிந்து வடிகட்டி உதிர்த்துக் கொள்ளவும். பிரிந்த நீரையும் எடுத்துவைக்கவும். (உடனடியாக பனீரை உபயோகிக்க இந்த முறை. முறையாக பனீர் செய்யு)
  • அரிசியைக் கழுவி, பனீர் வடித்த நீர் 2 கப் சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், குடமிளகாயை மெலிதான நீளதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • தொடர்ந்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை,  வெங்காயம், குடமிளகாய், மாங்காய்த் துருவல், தேங்காய்த் தூருவல் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இறுதியில் பனீரும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். (உப்பு, மஞ்சளை கலவையிலேயே சேர்த்துவிடுவது, சாதத்தில் அவை சீராகப் பரவ உதவும்.)
  • உதிராக வடித்து வைத்துள்ள சாதத்தை உடைக்காமல் மென்மையாக நன்கு கலந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
எள் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 6
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை.
eL saadham
செய்முறை:
  • அடுப்பில் வாணலியில் எண்ணெய் விடாமல் எள்ளை வறுக்கவும். படபடவென பொரியும் போது எடுத்து வைக்கவும்.
  • எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு மிளகாயை வறுத்து, எள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். (சிறிதளவு உப்பு மட்டும்- அரைபடுவதற்காக)
  • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • உதிராக வடித்த சாதத்தில் தாளித்ததைக் கொட்டி, தேவையான உப்பு, எள் பொடியைத் தூவிக் கலக்கவும்.
*  விரும்பினால் ஒரு டீஸ்பூன் தோசை மிளகாய்ப் பொடி சேர்த்துக் கலக்கலாம். சுவையாக இருக்கும். (நான் சேர்த்திருக்கிறேன்.)
* காய்ந்த மிளகாய்க்குப் பதில் மிளகும், எண்ணைக்குப் பதில் நெய்யும் உபயோகிக்கலாம்.
* கருப்பு எள் உபயோகித்தால் சாதம் நிறம் கருப்பாக இருந்தாலும் அதிக மணமாக இருக்கும். (நான் வெள்ளை எள் உபயோகித்திருக்கிறேன்.)
* யார் வீட்டிலாவது எள் சாப்பிட்டால் அவர்கள் வீட்டுக்கு உழைக்க வேண்டியிருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. நான் அறிந்தவரை தவறானது. எள் கொழுப்புச் சத்தானது. அதனால் யார் வீட்டில் சாப்பிட்டாலும் நம் வீட்டுக்கு வந்து உண்ட கொழுப்பைக் குறைக்க கொஞ்சம் அவசியம் உழைக்க வேண்டும். :) அவ்வளவுதான்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
அப்பளம், வடாம், வாழைத்தண்டு மோர்க் கூட்டு

தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 2, 3
கறிவேப்பிலை.
தோசை மிளகாய்ப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – தேங்காய் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம்.
 
thengaai saadham
செய்முறை:
  • அரிசியை அளவாகத் தண்ணீர் வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்தால் மேலும் ஒட்டாமல் இருக்கும்.
  • வாணலியில் தேங்காய் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • துருவிய தேங்காயையும் சேர்த்து லேசாக இளம் சிவப்பாகும் வரை வதக்கி, சாதத்தில் கொட்டி தேவையான உப்பும் சேர்த்து, சாதம் உடையாமல் கலக்கவும்.
* இது போன்ற வகை கலந்த சாதங்களுக்குத் தாளிக்கும்போது 1/2 டீஸ்பூன் எள் அல்லது சாதம் கலந்தபின் கடைசியில் 1/2 டீஸ்பூன் தோசை மிளகாய்ப் பொடி கலந்தால் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும். வழக்கம்போல் இதன் காப்பிரைட் எனக்கே சொந்தம். :)
* விருந்தினர் அல்லது பார்ட்டி மாதிரி நேரங்களில் நிலக்கடலைக்குப் பதில் முந்திரிப் பருப்பு உபயோகிக்கலாம். குழந்தைகளுக்கானதாக இருந்தால் கிஸ்மிஸ் கூட.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 2 (பெரியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை
காய்ந்தமிளகாய் – 4,5
கடுகு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வெல்லம் – சிறு கட்டி(விரும்பினால்)
பெருங்காயம்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம்.
செய்முறை:
  • கடுகு, வெந்தயத்தை எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித் தழை, வெல்லம், தேவையான அளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, எலுமிச்சைச் சாறுடன் கலந்துவிடவும்.
  • வாணலியில் எண்ணை சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • உதிராக வடித்த சாதம் சூடாக இருக்கும்போதே ஒரு டீஸ்பூன் நெய், தாளித்தவை, சாறுக் கலவை எல்லாம் சேர்த்து உடையாமல் கலக்கவும்.

தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 4,5
எலுமிச்சம் பழம் – 2 (பெரியது)
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சைப் பட்டாணி (விரும்பினால்)
குடமிளகாய் – 1 (விரும்பினால்)
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
தோசை மிளகாய்ப் பொடி -  1/2 டீஸ்பூன். (விரும்பினால்)
தாளிக்க – நல்லெண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, சீரகம், பெருங்காயம்.
elumichchai saadham 1
செய்முறை:
  • சாதத்தை உதிர் உதிராக வடித்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து ஒட்டாமல் பரத்தி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை(அல்லது பச்சைப் பட்டாணி), சீரகம், பெருங்காயம், குடமிளகாய், இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • மெலிதாக நீளமாகவோ அல்லது பொடிப்பொடியாகவோ விருப்பப்படி நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி சாதத்தில் சேர்க்கவும்.
  • கை படாமல் விதை நீக்கிய எலுமிச்சைச் சாறு பிழிந்து, சாதம் உடையாமல் கலக்கவும்.
  • தோசை மிளகாய்ப் பொடி, கொத்தமல்லித் தழை, இருந்தால் 4,5 புதினா இலைகள் கலந்து பரிமாறலாம்.
* வெங்காயத்திற்கு பதில் மெலிதாக நறுக்கிய கோஸ், பொடியாக நறுக்கிய குண்டு பீன்ஸ் அல்லது பிஞ்சு கத்திரிக்காய் என்ற வகையில் ஏதாவது ஒன்று சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.
* நிலக்கடலைக்குப் பதில் பச்சைப் பட்டாணியோடு முந்திரிப் பருப்பும் உபயோகிக்கலாம்.
 
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொரித்த அப்பளம், வடாம், சாதாக் கறி வகைகள்.

தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3,4
வெங்காயம் – 1 (விரும்பினால்)
பச்சைப் பட்டாணி (விரும்பினால்)
மஞ்சள் துள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை.
தாளிக்க:
எண்ணை -  2 டேபிள்ஸ்பூன்
கடுகு -  1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு -  2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயம்.
thakkaali saadham
செய்முறை:
  • தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய், வெங்காயம், பச்சைப் பட்டாணி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது வதக்கிக் கொள்ளவும்.
  • கடைசியில் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வந்ததும் இறக்கவும்.
  • உதிராக வடித்து நெய் கலந்து வைத்துள்ள சாதத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
* தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலை நீக்கிவிட்டு, கூழ் போல் ஆக்கியும் வதக்கிச் சேர்க்கலாம்.
* வெங்காயத்துடன் அல்லது அதற்கு பதில் கோஸ், கேரட், குடமிளகாய் போன்ற காய்கறித் துருவல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* காய்ந்த மிளகாயை மட்டும் தாளித்துவிட்டு, இரண்டு பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழையை (சேர்ந்து அரைபடுவதற்காக ஒரு தக்காளித் துண்டுடன்) அரைத்துச் சேர்த்து வதக்கலாம்.  இந்த முறையில் சாதத்தின் நிறம் கொஞ்சம் பச்சை கலப்பதால் அடர் சிவப்பாக இல்லாமல் போனாலும் மிகவும் சுவையாகவும் மணம் கூடுதலாகவும் இருக்கும். அநேகமாக இந்த முறையிலேயே செய்கிறேன்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொரித்த அப்பளம், வடாம், வற்றல், சாதாக் கூட்டு, தயிர்ப் பச்சடி வகைகள்…

காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் ஸ்ரீவத்சாங்கர். (இவர் தான் பிற்காலத்தில் கூரத்தாழ்வார் என்ற பெயரில் இராமானுஜரின் பிரதம சிஷ்யரானவர்.) காலை சூரிய உதயம் முதல் மாலை வரை ஒரு பெரிய வெள்ளி அண்டாவில் வெள்ளி நாணயங்களை வைத்துக் கொண்டு தானம் செய்து வருபவர்.
ஒருநாள் அவர் தானம் முடித்து வீட்டின் கதவை சாத்தும் ஒலி காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜர் சன்னதி வரை கேட்க, பெருந்தேவித் தாயார், வரதராஜரிடம், “நம் சன்னதி இன்று அதற்குள் நடை சாத்திவிட்டார்களா?” என்று வினவுகிறார். வரதராஜரும் புரியாமல் குழம்ப, அப்போது கோயிலில் சால் கைங்கர்யம் செய்துவரும் திருக்கச்சி நம்பி, அவர்களிடம்,, ‘இது நமது கோயில் கதவின் சத்தம் அல்ல. கூரத்தில் ஸ்ரீவத்சாங்கர் தானம் கொடுத்து முடித்து, திருமாளிகை கதவடைக்கும் ஒலி” என்று சொல்கிறார்.
இந்தச் செய்தி அறிந்த ஸ்ரீவத்சாங்கர், காஞ்சி வரதரின் கோயில் கதவின் சத்தத்தையே மிஞ்சுவதாக தன் மாளிகைக் கதவின் வலிமையும் சத்தமும் இருந்ததற்காக மனம் கலங்குகிறார். தன் அத்தனை சொத்தையும் காஞ்சிக் கோயிலுக்கு எழுதிவைத்து விட்டு வீசிய கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு திருவரங்கத்திற்கு இராமானுஜருக்குக் கைங்கர்யம் செய்யக் கிளம்புகிறார்.
இருவரும் திருவரங்கம் வரும் வழியில் அடர்ந்த கானகம் வழியாக வருகிறார்கள். அப்போது அவர் மனைவி ஆண்டாளம்மா, “வழியில் ஏதும் பயமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார். ஸ்ரீவத்சாங்கர், ‘மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்? மடியில் ஏதாவது வைத்திருக்கிறாயா?’ என்று திருப்பிக் கேட்கிறார். ‘எதுவும் இல்லை. நீங்கள் அமுது செய்ய மட்டும் ஒரு தங்க வட்டில் கொண்டுவந்திருக்கிறேன்!’ என்று சொல்ல அதை வாங்கித் தூர எறிகிறார். இருவரும் தொடர்ந்து திருவரங்கத்தை அடைந்து ஒரு வீட்டில் தங்குகிறார்கள். (அதுவே தற்பொழுது கீழச் சித்திரை வீதியில் தேருக்கு எதிராக முதலியாண்டான் திருமாளிகை அருகே இருக்கும் கூரத்தாழ்வார் திருமாளிகை).
இரண்டு மூன்று நாள்கள் பட்டினியிலேயே கழிக்கிறார்கள். மூன்றாம் நாள் இரவு கோயிலிலிருந்து அரங்கன் இரவு அரவணை அமுதுசெய்வதற்கான மணிச்சத்தம் கேட்கிறது. ஆண்டாளம்மா, அரங்கனிடம் ‘நீ இந்நேரம் அரவணை அமுது செய்துகொண்டிருப்பாய். என் கணவர் பட்டினியாக இருக்கிறாரே!’ என்று மனதிற்குள் விசனப்படுகிறார். சிறிது நேரத்தில் அரங்கன் அனுப்பியதாகச் சொல்லி பரிசாரகர் ஒருவர் கோயில் பிரசாதமான அரவணையை எடுத்துவந்து ஆழ்வாரிடம் தருகிறார். ‘நீ ஏதும் மனதில் நினைத்தாயா?’ என்று அவர் மனைவியைக் கண்களாலேயே கேட்க, பயத்தில் ‘ஆம்’ என்ற பதில் மனைவியிடமிருந்து கிடைக்கிறது.
அரவணையில் மனைவியிடம் இரண்டு கவளம் கொடுத்துவிட்டு, பிரசாதம் என்பதற்காக தான் ஒரு கவளம் மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை பரிசாரகரிடமே திரும்பக் கொடுத்தனுப்புகிறார். அந்தப் பிரசாதத்தின் பயனாகப் பிறந்த குழந்தைகள் தான் வேதவியாசர் மற்றும் பராசர பட்டர்.
-0-
வேதவியாச பட்டர் மற்றும் பராசர பட்டர் சந்ததியினர் தான் இன்றும் திருவரங்கத்தில் (பட்டரய்யங்கார் என்று சொல்வார்கள். எங்களுக்கெல்லாம் அவர் ‘பத்ரி அப்பா’ தான் :) ][கைசிக ஏகாதசி அன்று இரவு அரங்கனுக்கு 'போர்வை சார்த்தும் வைபவம்' முடிந்தபின் கைசிக புராணம் படிப்பார்கள். இவரை மறுநாள் 'பிரும்ம ரதம்' என்று சொல்லப்படும் பல்லக்கில் சர்வ மரியாதையுடன் உத்தர வீதி வலமாக இவர்கள் வீட்டிற்கு அழைத்துவருவார்கள். [பல்லக்கில் இவர் எப்படி கண்ணை மூடிக்கொண்டு சிரிக்காமல் இருக்கிறார் என்பது என் குழந்தைக் கால ஆச்சரியம். இப்போதும் தான். நானாக இருந்தால் கண்ணை லேசாகத் திறந்து இடுக்கு வழியாக என்னை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று பார்ப்பேன் என்று சொல்லி வீட்டில் திட்டு வாங்குவேன். :) )]
வேதவியாச பட்டர் சந்ததியினர் தான் இன்றும் திருவரங்கத்தில் தினமும் காலையில் விசுவரூபம் முடிந்து ‘பஞ்சாங்கம்‘ படிக்கிறார்கள்.
-0-
மார்கழித் திருநாளில் பெருமாள் முன் எல்லா ஆழ்வார்களும் ஏளியிருக்க,
‘சக்கரத்தாழ்வர் ஏன் வரலை பாட்டி? அவர் ஆழ்வார் இல்லையா?’
“இல்லை. பாசுரம் பாடினவா மட்டும் தான்..’
“அப்ப கூரத்தாழ்வார் மட்டும் என்ன பாடியிருக்கார்?”
“நாலாயிரத்துல ஒன்னும் இல்லை”
“பின்ன ஏன் இங்க சேர்க்கணும்?”
“அப்புறம் சொல்றேன்”
“இப்பவே சொல்லு பாட்டி!”
“அதெல்லாம் சம்ஸ்கிருதத்துல வேணது பாடியிருக்கார்!” சொல்லிட்டா மட்டும்… என்ற அலட்சியம் அந்தப் பதிலில் இருக்கும்.
“ஆனா ஆண்டாள் பாடியிருக்காளே, அவங்க ஏன் வரலை”
“அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது” (பொம்மனாட்டிகளை பொதுவுல உக்கார வைக்க மாட்டாங்கன்னு சொன்னா அப்ப நீ, நானெல்லாம் பொம்மனாட்டி இல்லையான்னு கேட்பேன்னு தெரியுமே.. :) ]
“புரியும் சொல்லு!”
“அதிகப் பிரசங்கி. உன்னை வீட்டுலயே விட்டுட்டு வந்திருக்கணும். நேரம் காலம் இல்லாம படுத்தறது. இனிமே எங்கயும் நீ கிடையாது. வீட்டுலயே விட்டுட்டு வரேன்!”
“சரி வேண்டாம், ஆனா இப்ப பதில் சொல்லு!”
கூட்டத்தில் கால்களைத் தரையில் அழுந்த ஊன்றிக் கொண்டு நகர மறுத்த என்னை போலிஸ்காரர் தூக்கிக் கொண்டு போய் ஆரியபடாள் வாசலுக்கு அந்தப் பக்கம் போட்டார்.
குழந்தை என்னாயிற்று என்று கிஞ்சித்தும் கவலைப்படாமல் பாட்டி சாவகாசமாக அரையர் சேவை முடித்து, கருடன் சன்னதி வாசலில் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்த என்னை பொறுக்கிக் கொண்டு வீட்டுக்குப் போனார்.
[இப்போதெல்லாம் சாதாரண நாள்களிலேயே கோயில் ஏன் இவ்வளவு ஆரவாரமாக இருக்கிறது? அந்த நாளும் வந்திடாதா?? :( ((( ]
கூரத்தாழ்வார் சம்ஸ்கிருதத்தில் ‘பஞ்ச ஸ்தவம்’ முதல் பல ஸ்லோகங்கள் இயற்றியவர்; இராமானுஜரின் பிரதம சீடர். அவருக்காக சோழமன்னரிடம் கண்களையே இழந்தவர் போன்ற விபரங்கள் பின்னாளில் அறிந்துகொண்டது.
-0-
அரவணை – அரவு + அணை – பாம்பணை
ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டுமே அரங்கனுக்கும் அவனது அணையான ஆதிசேஷனுக்கும் அமுதுசெய்யப் படும் பிரத்யேக உணவு.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 1 1/2 கப்
நெய் – 1 1/4 கப்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்.
aravanai
செய்முறை:
  • முதலில் அரிசியை நன்கு உதிர வேகவைத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை தண்ணீரில் கரையாத, மிகவும் கெட்டியான(உருட்டும்) பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.
  • சாதத்தைப் பாகில் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
  • கிளறிக் கொண்டிருக்கும்போதே நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து முடித்துவிட வேண்டும். (கோயிலில் அரவணை மண்பாண்டத்தில் செய்வதால் நெய்யை கிறுகிறுவென்று இழுக்குமாம்.)
  • நன்கு கிளறி ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
* இரவு ஒன்பது மணிக்கு இந்த அரவணையோடு, நாட்டுச் சர்க்கரை, குங்குமப்பூ கலந்து சுண்டக் காய்ச்சிய பாலும் அமுதுசெய்தபின் கோயில் நடை சாத்தப்படும்.
* அரங்கன் கோயில் பிரசாதத்தில் சர்க்கரை, முந்திரிப் பருப்பு, மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவை சேர்க்கப் படுவதில்லை. நெய் தவிர வேறு எண்ணை வகைகள் எதுவும் அரங்கனுக்கு எதற்குமே சேர்ப்பதில்லை. பிரசாதங்கள் என்றில்லை, அவருக்குக் காட்டுகிற தீபம், உலா வரும் போது காட்டுகிற தீவட்டி(தீவர்த்தி) வரை டின் டின்னாக நெய் மட்டுமே உபயோகிக்கப் படும்.
* படத்தில் இருக்கும் அரவணை என் விருப்பத்தின் பொருட்டு சென்ற வாரம் எங்கள் வீட்டு விசேஷத்திற்காக மண்டபத்தில் பரிசாரகர் ஒருவர் தயாரிப்பது. சுவையாக இருந்தாலும் அந்த ‘அரங்கன் டச்’ மிஸ்ஸிங் என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். அரங்கன் பிரசாதங்களுக்கு மட்டும் இருக்கும் அந்த வாசனை மற்றும் ருசிக்கான காரணத்தை யாராவது ரூம்போட்டுத் தான் யோசிக்க வேண்டும். யாராவது எங்காவது ஸ்டாலில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அந்த மாதிரி இல்லையே என்றால் அவர்களுக்கு இரக்கப்பட்டுச் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது – “போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!” :)
* காலையில் பொங்கல், ரொட்டி, வெண்ணண. மதியம் ‘பெரிய வஸ்திரம்’ என்ற பெயரில் சாதம், பருப்பு, கறியமுது அல்லது நெகிழ்கறியமுது, குழம்பு, சாற்றமுது, திருக்கண்ணலமுது. மாலை ஷீரான்னம்(உப்பு, வெல்லம் இரண்டுமே கலந்தது), கருப்பு உளுந்தில் செய்த திருமால் வடை, தேன்குழல், புட்டு, அதிரஸம். இரவு அரவணையோடு பால்.
வெள்ளிக்கிழமை மட்டுமே மிளகு சேர்த்த புளியோதரை, தோசை செய்வார்கள். அதற்கு ‘புளுகாப்புப் புளியோதரை’, ‘புளுகாப்பு தோசை’ என்று பெயர்.
ஏகாதசி, அமாவாசை ரேவதி நட்சத்திரம் ஆகிய நாள்களில் புறப்பாடு, திருமஞ்சனம் மற்றும் மேற்சொன்னவையோடு தோசையும் அரிசி வடையும் ஸ்பெஷல்.
ஆனால் இவை இல்லாமல் ஸ்டால்களில் எல்லா நாளும் அநேகமாக விதவிதமாக எல்லா உணவுப் பண்டங்களும் கிடைக்கும். எனவே ஸ்டாலில் வாங்குபவை எல்லாம் அரங்கன் பிரசாதம் அல்ல என்று மட்டும் அறியவும். இது தகவலுக்கு மட்டுமே. (பக்கத்தில் இருக்கும் ஸ்ரீபண்டாரத்தில் அவ்வப்போது சில பிரசாதங்கள் கிடைக்கும். அவற்றை நம்பி வாங்கலாம்.)
srirangam  koil paal

* அரங்கன் “வெள்ளி பூணார்; வெண்கலம் ஆளார்”. அதாவது தங்கம் தவிர வெள்ளியாலான நகைகளை எல்லாம் அணிய மாட்டார். பித்தளை, வெண்கலம் போன்ற பாத்திரங்கள் தளிகைக்கு உபயோகிக்க மாட்டார்கள். ‘ஸ்வர்ண பாத்திரம்’ என்று சொல்லப்படும் மண்பானைகளையே (அன்றாடம் புதிய புதிய பானைகள்) தளிகைக்கு உபயோகிப்பார்கள். மண் பானையில் செய்வதால் அக்கார அடிசில் முதல் பல பிரசாதங்கள் லேசாக அடிப்பிடித்த வாசனை வரும். முக்கியமாக இந்தக் காய்ச்சிய பால். மேலே படத்தில் இருக்கும் அரங்கன் பால் பிரத்யேகமாக அன்றைய பட்டர், மணியக்காரர் போன்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனக்கு பட்டர் வீட்டிலிருந்து வந்தது.

பங்குனி உத்திர நாளில் பொதுவாக அக்கார அடிசில் அல்லது சர்க்கரைப் பொங்கல் தான் செய்வோம். ஸ்ரீரங்கத்தில் அநேகம் பேர் பெருமாள் தாயாரை சேர்த்தித் திருக்கோலத்தில் தரிசிக்கும் வரை எதுவும் சாப்பிடாமல், அதன்பின்னும் அன்று முழுவதும் இனிப்பான உணவு மட்டுமே உண்பார்கள்.
பங்குனி உத்திரத் திருநாள் குறித்து ஒரு பதிவு.
அர்ச்சனை செய்த கல்கண்டு அதிகமாகச் சேர்ந்துவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல், ஒருமுறை கொஞ்சம் தயங்கியே கல்கண்டு பாத் செய்துபார்த்து, பிடித்துப் போனதால் பொங்கல் செய்வதற்காகவே கல்கண்டு வாங்க ஆரம்பித்து விட்டேன். நிறைய திருமணங்களில் இந்தப் பொங்கலை இப்போது இரவு விருந்துக்குச் செய்கிறார்கள். சர்க்கரை, வெல்லத்தைவிட கல்கண்டு மிக வித்தியாசமான சுவையோடு கொஞ்சம் ராயலாக நன்றாக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
பால் – 1 கப்
கல்கண்டு – 2 கப்
நெய் – 1/2 கப்
கேசரிப் பவுடர்
முந்திரி
கிஸ்மிஸ்
ஏலப்பொடி
பச்சைக் கற்பூரம்
குங்குமப் பூ.
செய்முறை:
  • அரிசி, பருப்பைக் கழுவி, பாலும் தண்ணீரும் சேர்த்து 3 பங்கு இருப்பது போல் வைத்து, குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் கிஸ்மிஸ், முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலி அல்லது அடிகனமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீரோடு கல்கண்டையும் போட்டு, பாகு காய்ச்சவும். (முடிந்தவரை பெரிய சைஸ் கல்கண்டாக இருந்தால் உடைத்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் கரைவதற்குள் போரடிக்கும்.)
  • ஏலப்பொடி கேசரிப் பவுடர் சேர்க்கவும்.
  • பாகு லேசாக வந்தவுடன், பொங்கலை அழுத்தமாகக் கரண்டியால் ஓரளவு மசித்து, பாகில் சேர்க்கவும்.
  • மீதி நெய்யையும் சேர்த்து, இறுகிச் சுருண்டு கெட்டியாக வரும்போது இறக்கவும்.
  • நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ சேர்க்கவும்.


கர்நாடக மாநில உணவு. பொதுவாக விருந்து போன்ற நேரங்களில் ஏராளமான சாதம் சாம்பார் என்றெல்லாம் தனித் தனியாக இழுத்துவிட்டுக் கொண்டு கஷ்டப்படுவதை விட இப்படி ஒரே ஐட்டமாகச் செய்வதால் நேரம், இடம், சிரமம் குறைவு. எழுத்தாளர் உஷா, இதைச் செய்துபோட்டு பெரிய இலக்கியவாதிகளை எல்லாம் வாயடைக்க வைத்திருக்கிறார் என்பது உபரித் தகவல். :)

தேவையான பொருள்கள்:
அரிசி – 1 1/2 கப்
துவரம்பருப்பு – 1 கப்
கொப்பரைத் தேங்காய் – ஒரு மூடி
கசகசா – 1 டேபிள்ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம்
எண்ணை – 1/4 கப்
நெய் – 1 டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 50 கிராம்
தனியா – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
bizibhelaa-bhaath.JPG
செய்முறை:
  • காய்ந்த மிளகாய், தனியா, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவைகளைப் பொன்னிறமாக வறுத்து நைசாக பொடித்துக் கொள்ளவும்.
  • கசகசாவை தனியாக வறுத்துக் கொள்ளவும்.
  • கொப்பரைத் தேங்காயை, துருவி, சிவக்க வறுத்து, வறுத்துவைத்துள்ள கசகசாவோடு பொடித்துக் கொள்ளவும்.
  • புளியை நீர்க்கக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • குக்கரில் அரிசி, பருப்பை கழுவி, சேர்த்து வைத்து, மஞ்சள் தூள், 3 பங்கு தண்ணீர் வைத்து குழைய வேகவிடவும்.
  • அடுப்பில் வாணலியில் அரிசி, பருப்புக் கலவையோடு புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கிளற ஆரம்பிக்கவும். புளி வாசனை அடங்கும்வரை கிளற வேண்டும். அதனால் தேவைப்பட்டால் இன்னும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அத்தோடு பொடித்துவைத்துள்ள தேங்காய் கசகசாப் பொடி சேர்க்கவும். தேவையான அளவு மட்டும் (சுமார் 3 அல்லது 4 டீஸ்பூன்) பொடித்துவைத்துள்ள மசாலாப் பொடி சேர்த்து, கிளறி இறக்கவும்.
  • எண்ணையில், கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
* கடைசியாக எப்பொழுதும் சொல்லும் ‘நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்’ என்ற வாசகம் இதற்குக் கிடையாது. பச்சைக் கொத்தமல்லி சேர்ப்பது, குழம்பு உலகத்திற்கு நம்மைக் கொண்டுபோய் விடும். வறுத்த தனியா, கொப்பரை, கசகசாவின் வாசமும் பருப்பின் குணமுமே இதில் மேலோங்கி இருக்கவேண்டும்.
* அடுப்பிலிருந்து இறக்கியபின் நேரம் ஆக ஆக மிக அதிகமாக இறுகும். எனவே இறக்கும் சமயத்திலேயே மிக மிகத் தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
* குக்கர் உள்பாத்திரத்தில் அரிசி, பருப்பை வேகவைப்பதை விட ப்ரஷர்பேனில் நேரடியாக வேகவைத்து, பின் திறந்ததும் அதிலேயே புளித்தண்ணீர், மசாலாவைக் கலந்து கிளறுவது சுலபமாக இருக்கும்.
* கோஸ், கேரட், நூல்கோல், பச்சைப் பட்டாணி, சௌசௌ போன்ற காய்கறிகள், ஏதாவது ஒன்றோ அல்லது எல்லாமேயோ மிக மிக மெல்லிய துண்டுகளாக அரிந்து, அரிசி பருப்போடு சேர்த்து வேகவைக்கலாம். மாறுபட்ட சுவையோடு நன்றாக இருக்கும். (நான் எப்பொழுதும் இப்படியே செய்கிறேன்.)
* மசாலா வாசனை விரும்புபவர்கள், வறுத்து அரைக்கும் பொருள்களோடு இலவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வறுத்து அரைக்கலாம். அநேக ஹோட்டல்களில் இப்படியே பரிமாறுகிறார்கள். (எனக்கு மசாலா வாசனை பிடிக்கும் என்றாலும் இந்த உணவில் அதைச் சேர்ப்பது பிடிக்காது.)
* தேங்காய் கொப்பரையாகக் கிடைக்காவிடில், முற்றிய தேங்காயை உபயோகித்துக் கொள்ளலாம். அல்லது அதை உடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரத்தில் கொப்பரையாகிவிடும். (கொப்பரையாகி விட்ட தேங்காயை ஃப்ரிட்ஜில் வைத்தால் மீண்டும் தேங்காய் மாதிரி சுலபமாகத் துருவ வரும் என்பது இன்னொரு, ஆனால் இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத குறிப்பு.)
* விருந்து போன்ற சமயங்களில் செய்வதானால் நெய்யில் சிறிது முந்திரிப் பருப்பு  வறுத்தும் போடலாம்.
* கடைசியாக ஆனால் முக்கியமாக, கர்நாடக மக்கள் பொதுவாக எல்லா உணவுகளிலும் கடைசியில் சிறு கட்டி வெல்லம் சேர்ப்பார்கள். விரும்புபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். (எனக்குப் பிடிக்காது.)
சுலப முறை: (என் முறை என்றே படிக்கவும்.)
ஒவ்வொரு முறையும் இவ்வளவு மெனக்கெடத் நேரமில்லாதவர்கள்–
காய்ந்த மிளகாய் – 50 கிராம்
தனியா – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
கொப்பரைத் தேங்காய் – 1 (துருவியது)
கசகசா – 2 டேபிள்ஸ்பூன்
விரும்பினால்…
இலவங்கப் பட்டை – 4 துண்டு
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
மராட்டி மொக்கு – 10
  • இவைகளை வறுத்துப் பொடித்து, தயாராக வைத்துக் கொண்டால், அரிசி, பருப்பை வேகவைத்து, புளித்தண்ணீர், தேவையான அளவு மசாலாப் பொடி கலந்து, கிளறி இறக்குவது சுலபம். பொடியில் தேங்காய் சேர்த்திருப்பதால், ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் எந்த ஊர் தட்பவெப்பத்திற்கும் கவலை இல்லாமல் இருக்கலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
உருளைக் கிழங்கு, வாழை, சேனை போன்ற ஏதாவது காய்கறி ரோஸ்ட், பிசிபேளாவில் சேர்க்காத காய்கறியில்(like வெள்ளரி) செய்த தயிர்ப் பச்சடிகள், அப்பளம், வடாம், சிப்ஸ் வகை.
என் தேர்வு எப்பொழுதும், சுடச் சுட பாதி ஈரத்துடன் சீறிப் பொரியும் மலையாளப் பப்படம்.

 ”தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது என்றார்கள். புளியோதரை இருந்தது. வாங்கிக் கொண்டேன். ஒரு சிறிய தொன்னைப் புளியோதரை ஆறரை ரூபாய். ஆனால் அமிர்தம் தான். திருவல்லிக்கேணி கோவிலில் சர்க்கரைப் பொங்கல் தான் ரொம்ப விசேஷம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதைத் தூக்கியடிப்பதாக இருக்கிறது புளியோதரை. இதுவரை ருசிக்காதவர்கள் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.”
 – ரா.கி.ரங்கராஜன் (நாலு மூலை)
ஒருமுறை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஆசை அடங்காமல் மீண்டும் கோயில் உள்வரை போய் வாங்கிச் சாப்பிட்டேன். பிரசாதம் எல்லாம் கொஞ்சமாகத் தான் சாப்பிடவேண்டும் என்று பக்கத்திலிருந்தவர்கள் செய்த நக்கலை எல்லாம் அலட்சியம் செய்து எண்சாண் உடம்புக்கு நாவே பிரதானம் என்று செயல்பட்டேன். விலை கொஞ்சம் அதிகம் என்று தோன்றியதும் உண்மை. மேலே உள்ள வரிகளைப் படித்தபோது நான் தனியாள் இல்லை என்று ஒரு பெருமை.
கீழே இருக்கும் சமையல் குறிப்பைச் சொல்லி இருப்பவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருக்கும் திரு. சம்பத் என்பவர். அவருக்கு நன்றி!
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 5 கப்
நல்லெண்ணை – 50 கிராம்
மிளகு – 200 கிராம்
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 100 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
வெந்தயம் – 10 கிராம்
சீரகம் – 5 கிராம்
கடுகு – 10 கிராம்
பெருங்காயம் – சிறிது
முந்திரிப்பருப்பு – 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள் – 10 கிராம்
செய்முறை:
  • புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும்.
  • புளியை கெட்டியாகக் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
  • நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும்.
  • எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்துவைத்துள்ள புளியைச் சேர்க்கவும்.
  • 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
  • புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்துவைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.]
  • மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும்.
  • பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.

நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.
தேவையான பொருள்கள்:
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 150 கிராம்
காய்ந்த மிளகாய் – 15
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கல் உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணை – 1/2 கப்
புளியோதரைப் பொடி தயாரிக்க
காய்ந்த மிளகாய் – 15லிருந்து 20
தனியா – 3 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு
புளியோதரை கலக்க
உதிராக வடித்த சாதம்
புளிக்காய்ச்சல்
புளியோதரைப் பொடி
மஞ்சள் பொடி
நல்லெண்ணை
பச்சைக் கருவேப்பிலை
நிலக்கடலை
வெந்தயம்
கடலைப் பருப்பு
உளுத்தம் பருப்பு
முந்திரிப் பருப்பு
வெள்ளை எள்
iyengar puliyotharai

செய்முறை:
புளிக்காய்ச்சல்:
  • முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து, உப்பு சேர்த்துக் கரைத்து, வடிகட்டவும்.
  • அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முழு மிளகாய் வற்றலை நன்கு வறுத்து, பின், கடுகு, சீரகம் பொரித்து புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து, நிதானமாகக் கொதிக்கவிட்டு, நன்கு கிளறிவிட வேண்டும்.
  • பாதி கொதிக்கும்போது பச்சை வெந்தயத்தையும் சேர்க்கவும்.
  • தளதளவென சப்தத்துடன் கொதித்து இறுகி, எண்ணை மேலே வரும் சமயம் புளிக்காய்ச்சல் தயார். அடுப்பை அணைத்து, நன்கு ஆறியவுடன், பாட்டிலில்* எடுத்துவைக்கவும்.
புளியோதரைப் பொடி:
  • அடுப்பை சிம்’மில் வைத்து வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணை விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.
  • அதிலேயே காய்ந்தமிளகாய், தனியாவை நன்கு வறுத்து எடுக்கவும்.
  • ஆறியதும், எல்லாச் சாமான்களையும் மிக்ஸியில் நைசாகப் பொடித்து எடுத்துவைக்கவும்.
புளியோதரை கலக்கும் விதம்:
  • ஒரு பெரிய தாம்பாளத்தில் நன்கு சூடான, உதிர் உதிராக வடிக்கப்பட்ட சாதத்தை பரவலாகக் கரண்டியால் எடுத்துப் போடவும்.
  • அதன்மீது மஞ்சள் பொடி, பச்சைக் கறிவேப்பிலையைப் பரவலாகத் தூவி, நல்லெண்ணையையும் பரவலாகச் சேர்த்து அப்படியே நன்கு ஆறவிடவும்.
  • பின், தேவையான புளிக்காய்ச்சலை சாதத்தில் போட்டு, சாதம் குழையாமல் உடையாமல் மெதுவாகக் கரண்டியால் அல்லது கைவிரல்களால் (கையால் அல்ல) கலக்கவும்.
  • எண்ணையில் நிலக்கடலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், முந்திரிப்பருப்பு, எள் வறுத்து புளியோதரையில் சேர்க்கவும்.
  • கடைசியில் திட்டமான அளவு, புளியோதரைப் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
  • எள், தாளிக்கும்போது சேர்க்காமல், வறுத்து, பொடித்தும் கடைசியில் சேர்த்தால் மிகுந்த வாசனையோடு சுவையாக இருக்கும்.
  • உப்பு, சர்க்கரை, ஊறுகாய் மற்றும் உப்போ சர்க்கரையோ சேர்த்த மசலாக்களை பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் டப்பாக்களில் வைப்பது உடலுக்குத் தீங்கானது. இவைகளை எப்பொழுதும் கண்ணாடி பாட்டில்களிலேயே வைக்கவும். உள்ளேயே ஸ்பூன் போட்டு வைப்பதாக இருந்தால் மர ஸ்பூன் மட்டுமே உபயோகிக்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
பொரித்த அப்பளம், வடாம், சிப்ஸ் வகைகள், மெலிதாகத் தட்டப்பட்ட உளுந்து வடை (ஆஞ்சநேயர் கோயில் வடைமாலை), …

புளியோதரை


தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1/2 கிலோ
நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 25 (விரும்பினால்)
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க
நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 10
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விரை – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம் அல்லது ஒரு கிரிக்கெட் பந்து அளவு. :)
நல்லெண்ணை – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 8
உளுத்தம் பருப்பு -  1 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை – 50 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
  • புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நல்லெண்ணை விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, கொத்தமல்லி விரை, வெந்தயம், பெருங்காயம் என்ற வரிசையில் சேர்த்து நன்கு சிவப்பாக வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.
  • மீண்டும் வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, மூன்று நான்காய் கிள்ளிப் போட்ட காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை, வெந்தயம், வெள்ளை எள், பெருங்காயம், கறிவேப்பிலை என்ற வரிசையில் சிவக்க வறுத்து, பின் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மிக நிதானமான தீயில் வதக்கவும்.
  • புளிக்கரைசல் இறுகி, எண்ணை பிரிந்து வரும்வரை வதக்கி, எடுத்துவைத்துக் கொள்ளவும்.
  • சாதத்தை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான பாத்திரம் அல்லது தாம்பாளத்தில் கொட்டி ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிடவும். இப்படிச் செய்வதால் சாதம் மேலும் ஒட்டாமல் தவிர்க்கலாம்.
  • மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணையைச் சூடாக்கி, கடுகு, முந்திரிப்பருப்பு, வெள்ளை எள், கறிவேப்பிலை தாளித்து, சாதத்தில் சேர்க்கவும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக, புளிக் காய்ச்சலையும், அரைத்து வைத்துள்ள பொடியையும் மாற்றி மாற்றிச் சேர்த்துக் கலக்கவும்.
* எப்பொழுதும் புளிக்காய்ச்சல் தயாரிக்க, மிகப் பெரிய வாணலியாக எடுத்துக் கொள்ளவும். கொதிக்கும்போது நிறைய வெளியே தெறிக்காமல் இருக்க இது அவசியம். அடுப்பும்  அடுப்பு சார்ந்த இடமும் சுத்தப்படுத்துவது மிகப் படுத்தலான வேலை.
* புளிக்காய்ச்சலை சாதத்தோடு கலக்கும் இந்தச் சமயத்தில், ஒருவேளை உப்பு குறைவாக இருந்தால் மேலும் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
* புளியோதரை தயாரிக்கும் போது அதன் காரம், சாப்பிட்டுப் பார்த்தால் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தற்பொழுது மேலே உரைக்கும் காரம் சாதத்தில் இறங்கி, சாப்பிடும் நேரத்தில் சரியாக இருக்கும்.
* பொதுவாகவே அனைத்து வகைப் புளியோதரைகளும், கலந்து ஒரு 4 மணிநேரமாவது வைத்திருந்து, பிறகு சாப்பிட்டால்தான் ருசியாக இருக்கும். மறுநாள் என்றால் அற்புதமான சுவையோடு இருக்கும்.
* இந்த முறையில் எவ்வளவு சாதத்திற்கு, எவ்வளவு பொடி அல்லது புளிக்காய்ச்சல் தேவை இருக்கும் என்று எப்பொழுதுமே சரியான ஒரு அளவைச் சொல்ல முடியாது. அவரவர் ருசிக்குத் தக்க முன்னேபின்னே தான் தேவை இருக்கும். ஒருவேளை வறுத்துப் பொடித்த பொடி குறைவாக இருந்தால் கவலை இல்லை. இட்லி மிளகாய்ப் பொடி தூவி சமாளிக்கலாம். (அதிலும் உப்பு சேர்த்திருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.) ஆனால் புளிக் காய்ச்சல் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே செய்துவைத்துக் கொண்டு கலக்க ஆரம்பிப்பது தான் சரி.
-0-
பாலக்காடு:
மேலே கூறியவற்றிலிருந்து அதிக வித்தியாசம் இல்லை.
* வறுத்துப் பொடிக்கும் பொருள்களில் மாற்றம்-
கொத்தமல்லி விரை – 1 கப்
கடலைப் பருப்பு – 3/4 கப்
* புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்கும் சமயம் புளிக் கரைசலை விடுவதற்கு முன், மற்ற சாமான்களோடு பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய இஞ்சியும் சிறிது சேர்த்து வதக்க வேண்டும். விரும்பினால் புளிக்காய்ச்சலுக்கு மட்டும் ரிஃபைண்ட் ஆயில் உபயோகித்துக் கொள்ளலாம். (நல்லவேளை, சேச்சி தேங்காயெண்ணை என்று சொல்லவில்லை.)
* இஞ்சி, பச்சை மிளகாய் சேர்ப்பதாலோ என்னவோ, இந்தப் புளியோதரை இன்னும் அதிக ஃப்ரெஷ்ஷாக இருப்பதுபோல் எனக்கு ஓர் உணர்வு. கொத்தமல்லி விரை, கடலைப்பருப்பு அதிகம் சேர்ப்பதால் கொஞ்சம் சுவையும் மணமும் தூக்கலாகவே இருக்கும்.
-0-
ஆந்திரா: (புளிஹோரா அன்னமு)
பச்சரிசி – 1/2 கிலோ
நெய் அல்லது வெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்

வறுத்துப் பொடிக்க
நல்லெண்ணை – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 12
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி விரை – 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – சிறிது
புளிக்காய்ச்சல் தயாரிக்க
புளி – 100 கிராம்
நல்லெண்ணை – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தாளிக்க
நல்லெண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -  2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை -  50 கிராம்
முந்திரிப் பருப்பு – 25 (விரும்பினால்)
வெந்தயம் – 2 டீஸ்பூன்
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
  • மேலே ‘வறுத்துப் பொடிக்க’க் குறிப்பிட்டுள்ள பொருள்களை வறுத்து, நன்றாகப் பொடிசெய்து கொள்ளவும்.
  • வாணலியில், தாளிக்கக் குறித்திருக்கும் பொருள்களை தாளித்து, அத்துடன் கெட்டியாகக் கரைத்த புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
  • உப்பு மஞ்சள் தூளுடன், அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும்.
  • உதிர் உதிராக சமைத்த சாதம், சூடாக இருக்கும்போதே வெண்ணை அல்லது நெய் சேர்த்து ஆறவிட வேண்டும்.
  • எண்ணையில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சாதத்தில் சேர்க்கவும்.
  • சாதம் ஆறியதும், புளிக்காய்ச்சலையும் தேவையான அளவு சேர்த்துக் கலக்க வேண்டும்.
* இதில் முக்கியமாக என்னைக் கவர்ந்தது, அங்கங்கே காய்ந்த மிளகாய் அகப்பட்டுப் படுத்தாமல், எல்லாமே அரைபட்டிருப்பதால், கொஞ்சம் வேடிக்கை பார்த்துக் கொண்டோ, விஸ்தாரமாகப் பேசிக்கொண்டோ அலட்சியமாகச் சாப்பிடலாம். சுவையில் பெரிய மாறுதல் இல்லாமல், கொஞ்சம் நெய் வாசனையோடு நன்றாகவே இருந்தது.
-0-
ரெடி மிக்ஸ்:
ரெடி மிக்ஸ் புளியோதரைப் பொடி வாங்கிச் செய்பவர்களும் சுவையான புளியோதரை செய்யலாம்.
MTR Puliogareல் வழமையான கன்னட உணவுகளைப் போல சர்க்கரையும் வெல்லமும் சேர்த்திருப்பார்கள். :( தேங்காய் கூட(ரொம்பத்தான்!). அந்தச் சுவை பிடிக்காதவர்கள் அதைத் தவிர்த்துவிடலாம்.
வேறு எந்த ப்ராண்டாக இருந்தாலும், சாதத்தில் ரெடி மிக்ஸ் கலப்பதோடு, நம் பங்குக்கு, 2 டீஸ்பூன் நல்லெண்ணையில், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், நிலக்கடலை, வெள்ளை எள், முந்திரி(விரும்பினால்), கறிவேப்பிலை தாளித்துக் கலந்தால் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருக்கும்.
-0-

ஆடி வெள்ளிக் கிழமை, தை வெள்ளிக் கிழமை, போகிப் பண்டிகை ஆகிய நாள்களில் இந்த மிக மிக எளிமையான மஞ்சள் பொங்கல் செய்வார்கள். வடை பாயசம் என்று விஸ்தாரமாக சமைக்க முடியாத பண்டிகை நாள்களில் கூட இதை மட்டும் செய்தால் போதும், மங்களகரமானது என்பதால், ‘கல்யாணப் பொங்கல்’ என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. சிலர் குடும்பங்களில் பெண்கள் வயதுக்கு வந்ததும் முதல் உணவாக தாய்மாமன் பெயரைச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு இந்தப் பொங்கலை செய்துகொடுப்பார்கள் என்பதால் ‘அம்மான் பொங்கல்’ என்றும் பெயர்.

தேவையான பொருள்கள்:
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணை/நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு
 
செய்முறை:
  • அரிசி பருப்பைக் கழுவிக் களைந்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 பங்கு தண்ணீர் வைத்துக் குழைய வேக விடவும்.
  • தேங்காய் எண்ணை அல்லது நெய் கலந்து பரிமாறலாம்.
* இந்தக் குறிப்பைப் படிக்கும்போது, சாதரண சாத்ததில் நெய், பருப்பு சேர்த்து சாப்பிடுவதற்கும் இதற்கும் என்ன் வித்தியாசம் என்று நினைக்கலாம். நானும் நினைத்திருக்கிறேன். சுவை அளவில் பெரும் வித்தியாசம் இருப்பது செய்து பார்த்தால் தான் தெரியும்.
* நெய் கலந்து குழைந்த பொங்கல் சுவையாக இருக்கும். ஆனால் அதைவிட தேங்காய் எண்ணை சேர்த்த உதிரியான பொங்கல் மிகுந்த சுவையாக இருக்கும்.  பொங்கல் உதிரியாக இருந்தாலும் நன்றாக மென்மையாக வெந்திருக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகையன்று செய்வது…
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
நெய் – 1/4 கப்
மிளகு -  2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி -  ஒரு துண்டு
முந்திரிப் பருப்பு – 10
உப்பு -  தேவையான அளவு
ஹோட்டல் சுவைக்கு:

பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை -  சிறிது
மஞ்சள் தூள் -  1 சிட்டிகை
venpongal
செய்முறை:
  • பயத்தம் பருப்பைக் கழுவி லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • கழுவிய அரிசியோடு சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
  • வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து அடுப்பை அணைத்து, பொங்கலை அதில் கொட்டி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.
*  சாதாரண நாள்களில் பாதி நெய்யும், பாதி ரிஃபைண்ட் எண்ணையும் கலந்து செய்யலாம். உண்மையில் எண்ணணயில் தாளித்து, கடைசியில் நெய்யை சூடாக இருக்கும் பொங்கலில் கலந்து செய்வதே சுவை அதிகமாக இருக்கிறது.
venpongal.JPG

பொங்கல் பண்டிகையன்று செய்யும் இனிப்பு வகை..
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பால் – 1 கப் (*)
வெல்லம்  – 2 1/2 கப்
நெய் – 1/4 கப்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 20
கிஸ்மிஸ் – 20
ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
தேங்காய் – சிறிது
பச்சைக் கற்பூரம் – சிறிது

 sarkkarai-pongal11.JPG

செய்முறை:
  • அரிசி, பருப்புகளைக் கழுவி நீரை வடித்துவிட்டு, லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் பால், 3 கப் தண்ணீருடன் சேர்த்து குக்கரில்(அல்லது பானையில்) குழைய வேக விடவும்.
  • வாணலியில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • லேசான பாகு வந்தவுடன் பொங்கலை சேர்த்து நன்கு கிளறவும். இந்த மாதிரி பாகு வைத்துக் கிளறினால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
  • இறுதியில் நெய் சேர்த்து, கெட்டியாகிச் சுருண்டு வரும்வரை நன்றாகக் கிளறவும்.
  • ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, முந்திரி, கிஸ்மிஸ், மிகச் சிறுசிறு துண்டுகளாகக் கீறிய தேங்காய் எல்லாவற்றையும் 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் பொரித்துப் போட்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
* பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்தாலும் அல்லது இரண்டும் சரிசமமாகச் சேர்த்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.
sarkkarai pongal
சர்க்கரைப் பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. ‘இந்தக் குடுமிப்பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ ? சவத்தெளவு, எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . . ‘ என்று மாடன் வியந்து கொண்டது.
….
….
நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். ‘ஆருக்கு, எனக்கா ? ‘ என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது.
– மாடன் மோட்சம். (ஜெயமோகன்)
இந்துமதத்தின் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர், அதன் நடைமுறை யதார்த்தத்தை அதுவும் அந்த வட்டார மொழியில் சொல்லும்போது, இந்தக் கதை கிடைக்கலாம். வெளியிலிருந்து படிப்பவர்களுக்கு நகைச்சுவை கதையாகவும்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo